Wednesday, February 22, 2012

“என்னவரோடு இணைகையில்”

வாழ்க்கை எனும் நான்கெழுத்து கவிதையை நான் இன்னும் எழுதி முடிக்கவில்லை.... எழுதிக் கொண்டிருக்கிறேன்.... எனக்கு தெரிந்த வார்த்தைகளுடன்.... மெல்லினம், இடையினம், வல்லினம் இவை யாவும் என் வாழ்விலும் உண்டு... எதுகை மோனையும் உண்டு.... சந்தங்களும் உண்டு.... இவ்வளவு இலக்கணமும், இலக்கியமும் நிறைந்த என் வாழ்க்கை இன்னும் அழகடையும் “என்னவரோடு இணைகையில்” -கயல்விழி மணியன்

Thursday, February 16, 2012

நிலவு சொன்ன கதைகள்…


சன்னல் திறந்து வானம் பார்த்தேன்,

கார் முகில் ஊர்வலங்களோடு

எழில் மதி சொன்ன கதைகள்

ஆயிரம் ஆயிரம்...



இடுப்பில் சுமந்தபடி அம்மா

நிலாச்சோறு ஊட்டிய கதை…

நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா,

மழலையில் நான் பாடிய கதை…

காதல் வந்ததும்

நிலவோடு நானும் சேர்ந்து விழித்திருந்த கதை…

விண்ணில் நிலா அழகு –மண்ணில் நீ அழகு,

அவன் சொன்ன பொய் கதை..



இப்படி வாழ்வில் வந்து போன

கதைகளைச் சொன்ன நிலவே

உனக்கு நன்றிகள்

ஆயிரம் ஆயிரம்…

-கயல்விழி மணியம்

Monday, February 13, 2012


"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க"

"நட்பு" திரைப்படத்திற்காக யேசுதாஸ்-சும், ஜானகியும் பாடிய எண்பதாம் ஆண்டுப் பாடல்தான் இது.
எண்பதாம் ஆண்டுக் காலகட்டத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படப் பாடல்களில் என் மனதைக் கவர்ந்த பாடல்கள் எண்ணிலும் அடங்காது; ஏடுங் கொள்ளாது. இசை ஞானி இளையராஜவின் இசையுடன்கூடிய பாடல்வரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. அந்த வகையில், நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்கள் ஏராளம்...

இருந்தும், மூன்று நாட்களுக்கு முன் ஒரு எண்பதாம் ஆண்டுப் பாடல் திடீரென என்னுள் ரீங்காரமிட்டது. திடீரென்று சொன்னேன்.. எங்கே.. எப்போதென உங்களுக்குத் தெரியாதே...!! ம்ம்ம்ம், நள்ளிரவு மணி 12 இருக்கும். நான் குளியறையில் இருந்தேன். அந்நேரத்தில்தான், எனக்குள் அந்தப் பாடல் ஒலித்தது. அது எந்தப் பாடல்??

"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது............!!!!!!!" -இந்தப் பாடல்தான்...!!!

அப்போது ஒலிக்கத் துவங்கிய பாடல்...இந்த நொடி வரையில் என்னுள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. எங்கே போனாலும், இந்தப் பாடலை முனுமுனுத்தவாறேதான் இருக்கிறேன். என்ன மாயமோ, மர்மமோ தெரியவில்லை. இந்தப் பாடல் என்னை ஏதோ செய்துவிட்டது என்றால் அது மிகையில்லை. நான் காதலிப்பது அதன் வரிகளையா? இசையா? சத்தியமாக தெரியவில்லை. ஆனால், இப்பாடலை அதிகம் காதலிக்கிறேன்.

"காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க"

"ஒரு தத்தை கடிதத்தை" - என்னமா வரி இது?? வர்ணிக்க வார்த்தைகள் இல்லை போங்க!!!

"உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே" - ம்ம்ம்ம், செத்து போகலாம் இந்த வரிகளுக்கு... என்னங்க இது..? பார்க்காவிட்டாலும் தூக்கம் தொல்லையாக இருக்கிறதாம். பார்த்தாலும் தூக்கம் இல்லையாம். காதலர்களின் ஏக்கங்களைப் படம் பிடித்து காண்பிக்கும் நிஜ வார்த்தைகள் இவைத்தாம்.

"இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது"

கோதை...பேதை...பாதை...!!! இந்தச் சந்தங்கள் சிந்தும் சாரல்கள் எனை முழுதும் நனைக்கின்றன. பெண்ணின் பாதை அவளது கணவனின் பாதையை நோக்கியே செல்கிறதாம். மனதில் நினைத்த காதலனை மணமுடிக்காமல் உறங்காதாம் உண்மை காதலியின் மனது. எண்ணம் நிறைவேறினால் அதற்கு ஈடான சொர்கம் இல்லையாம்.. இப்படி எல்லாம் என்னவரைப் பார்த்து பாட ஆசைத்தான். அதைக் கேட்க அவர் வரணுமே..!!

இதில் என்ன வேடிக்கை தெரியுமா? சில நேரங்களில்..இல்லை இல்லை பல நேரங்களில் என்னை அறியாமலே இந்தப் பாடலைப் பொதுவில் உரக்கப் பாடி விடுகிறேன். "உங்களுக்கு என்ன ஆச்சு" என பிறர் எனைக் கேலி செய்யும் அளவிற்கு இப்பாடல் எனைக் கொண்டு வந்துவிட்டது. பாவம், இன்னும் யார் யாரிடமெல்லாம் இந்தப் பாடலைப் பாடித் தொல்லை செய்யப் போகிறேன் என தெரியவில்லை.

"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது" --- " நீங்க வரிங்களா? என் நெஞ்சில் நின்ற ராகத்தைக் கேட்டு ரசிக்க...? என்னோடு சேர்ந்து பாடினாலும் சரிதான்...!!! :)

-கயல்விழி மணியன்

Saturday, July 23, 2011

இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்…


நான் “கயல்” என்பதால்

உன் வலையில் விழுந்தேனோ??

நழுவ நினைத்தும், கெட்டியாய்

தழுவிக் கொண்டாய்…

நீரில்லாமல் வாழ்ந்திடுவேனோ??

இருந்தும், உன் உமிழ் நீரில்

இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்…

என்னுள் ஆக்சிஜன் இருப்பு முடியும் முன்னே,

எச்சிலூறும் முத்தங்கள் தந்துவிடு…!!!

----கயல்விழி மணியன்

“இலக்கியா"


இலக்கணங்கள் தகர்த்து கொஞ்சம்

இலக்கியமாய் காதல் செய்து

இலக்கணங்கள் ஒரு சேர

“இலக்கியா”…எங்கள் முதல் குழந்தை

பெற்றெடுப்போம்…!!!

---கணவன் மனைவி---

Saturday, February 5, 2011

இனி உனை எங்கே தேடுவேன்…?


என் ஸ்பரிசம் பட்டு
பழைய புத்தக அலமாரியில்
படிந்த தூசுகள்
பறந்ததுவோ என்னவோ…
நான் வெகு நாட்களாய்
தேடிய “குறிஞ்சி மலர்” நாவலில்
மறைந்திருந்த கடிதவுறை
மனம் திறந்தது…!!!

‘அன்புள்ள கயல்விழிக்கு’
என ஆரம்பி்த்து,
‘உன் பதிலுக்காக ஏங்கும், இளம்பரிதி’
என முடிந்த கடிதம்
காதல் மழை பொழிந்தது;
இங்கே என் விழிகளில்
கண்ணீர் திவலை வழிந்தது…!!!

ஏழாண்டுகள்…
ஒரு நல்லவனின் காதல்
மறைக்கப்பட்ட வருத்தத்தைவிட,
ஆறாண்டுகளுக்கு முன்
விபத்தொன்றில் அவன்
மறைந்தது,
வேதனையிலும்
வேதனை தந்தது…!!!


மேலும் எழுத இயலாமல்,
கயல்விழி மணியன்

தாயுமானவளாய்


கண்ணாடி முன் நின்று பார்தாலும்
முன்னாடி உன் முகம் தான்…
என்னை உள்வாங்கிய
உன் உருவம்,
அன்பின் அருவமாய் என்னுள்ளே…
விண்தாண்டி வரவில்லை;
மண்தாண்டியும் வரவில்லை;
அன்புத் தாயின் கர்ப்பம் தாண்டி
எனக்காக வந்திருக்கிறாய்…
உன் தாய்க்கு ஈடாக
நான் ஆக மாட்டேன் என்றாலும்,
என் உருவில்- நீ
உன் தாயைக் காண முயற்சிப்பேன்….!!!!
---கயல்விழி மணியம்---