Saturday, February 5, 2011

இனி உனை எங்கே தேடுவேன்…?


என் ஸ்பரிசம் பட்டு
பழைய புத்தக அலமாரியில்
படிந்த தூசுகள்
பறந்ததுவோ என்னவோ…
நான் வெகு நாட்களாய்
தேடிய “குறிஞ்சி மலர்” நாவலில்
மறைந்திருந்த கடிதவுறை
மனம் திறந்தது…!!!

‘அன்புள்ள கயல்விழிக்கு’
என ஆரம்பி்த்து,
‘உன் பதிலுக்காக ஏங்கும், இளம்பரிதி’
என முடிந்த கடிதம்
காதல் மழை பொழிந்தது;
இங்கே என் விழிகளில்
கண்ணீர் திவலை வழிந்தது…!!!

ஏழாண்டுகள்…
ஒரு நல்லவனின் காதல்
மறைக்கப்பட்ட வருத்தத்தைவிட,
ஆறாண்டுகளுக்கு முன்
விபத்தொன்றில் அவன்
மறைந்தது,
வேதனையிலும்
வேதனை தந்தது…!!!


மேலும் எழுத இயலாமல்,
கயல்விழி மணியன்

தாயுமானவளாய்


கண்ணாடி முன் நின்று பார்தாலும்
முன்னாடி உன் முகம் தான்…
என்னை உள்வாங்கிய
உன் உருவம்,
அன்பின் அருவமாய் என்னுள்ளே…
விண்தாண்டி வரவில்லை;
மண்தாண்டியும் வரவில்லை;
அன்புத் தாயின் கர்ப்பம் தாண்டி
எனக்காக வந்திருக்கிறாய்…
உன் தாய்க்கு ஈடாக
நான் ஆக மாட்டேன் என்றாலும்,
என் உருவில்- நீ
உன் தாயைக் காண முயற்சிப்பேன்….!!!!
---கயல்விழி மணியம்---

முதல் தலையணை


துயில் கொள்ளும் நேரம்
நான் தலை சாய கொஞ்சம்
ஆயிரம் தலையணைகள் வாங்கிடலாம்…
இந்த தலையணைகள் யாவும்
என் முதல் தலையணைக்கு ...
ஈடாகுமா???
தலைக் கோதி;
மாரோடு அணைத்து,
எனைத் தூங்க வைக்கும்
அன்பிலான என் தாய்மடிக்கு
ஈடாகுமா???
பஞ்சிலான தலையணைகள்
அதற்கு நிகராகுமா???
---கயல்விழி மணியன்---

Thursday, February 3, 2011

மரண சாசனம்…


பூமியில் காலடி வைக்கையில்
வழி காட்டினாய்…
இங்கிருந்து திரும்பச்
செல்ல காத்திருக்கிறேன்…
அம்மா, நீ உடன் இல்லை….!
தட்டுத் தடுமாறி நடக்கையில்
கைப் பிடித்தாய்…
இன்று நடக்கவே இயலாமல்
செயலிழந்து கிடக்கிறேன்….
அப்பா, நீ உடன் இல்லை…!
காதல் எனை அணைக்கையில்
இதயம் தந்தாய்…
உடல் கெட்டு
இன்று நான் படுக்கையில்….
அன்பே, நீ உடன் இல்லை…!
அழகான வாழ்க்கையில்
அன்பின் பரிசாய் கிடைத்தாய்…
இன்று நான்
வாழ்க்கையின் விளிம்பில்….
மகனே, நீ உடன் இல்லை;
எனை வெறுக்கும் மருமகளுடன்....!