Wednesday, May 26, 2010

புகழேந்தி


கமலியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போனது. வயிறு பெரிதாகும் அழகை அவள் ஒவ்வொரு நாளும் கண்ணாடியின் முன் நின்று ரசித்து வரலானாள். கர்ப்பிணி பெண்கள் உண்மையிலேயே கொள்ளை அழகுதான் என அவள் பெருமிதமும் கொண்டாள்.
கர்ப்பத்தில் தன் குழந்தை பந்தாடுவதைச் சுகமான உணர்வுகளாக உணர்ந்தாள்.தன் வாழ்க்கையே பந்தாடப்பட்டுள்ளதைக் கொஞ்சமும் எண்ணாமல் கருவறையில் உள்ள உயிரில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்தாள்.

"கழுத்துல தாலி இல்லாம இது என்னடி கோலம்" என்று கமலியின் தோழி அவள் கருவுற்ற நாள் தொட்டு ராமாயணம் பாடாத நாள் கிடையாது."கழுத்துல தாலி இருந்தாதான் ஒரு பொம்பள மாசமாக முடியுனு எந்த SCIENCE வாத்தியார் உனக்கு பாடம் கத்து தந்தான்?" என தோழிக்கு கமலி பதிலடி தராமலா?????

"யாருடீ உன் புள்ளைக்கு அப்பா? யாருக்கிட்டடீ கெட்டு போன? சொல்லுடி..நான் போய் பேசுறேன் அவன்கிட்ட..உங்க அம்மா அப்பாவப் பத்தி உனக்கு கவலை இல்லையா?" கமலியின் பால் அக்கறை கொண்டவளான தோழி அவளைக் கெஞ்சினாள். கமலியின் கண்களில் துளியும் சோகமில்லை. தாய்மையின் கீற்று தான் ஒளிமயமாக வீசியது. "அவனா?? மரியாதை! அவரை தெரிஞ்சு எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போறீயா? லூசா நீ? இது எனக்கு தெரியாதா? எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் இந்த ஜென்மத்தில் நடக்காதுனு தெரிஞ்சுதான் அவரோட புள்ளையே என் வயித்துல சுமக்கிறேன். இந்த விளக்கம் போதுமா? இல்ல, இன்னும் வேணுமா?" என்றாள் புன்னகை மாறாது கமலி. அவளை ஆச்சரியமாகப் பார்த்த தோழி, "அப்போ, உன் வீட்டுக்கு என்ன சொல்ல போறடீ?" என மேலும் வினவினாள். "கண்டிப்பா அவுங்களுக்கு ஒரு புள்ளையே இல்லனு முடிவு பண்ணப் போறாங்க. அவுங்களா அப்படி செய்யுறதவிட நானே விலகிக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்" என்றாள் சற்று கலங்கியவாறு கமலி. "உனக்கு என்னோட FRIENDSHIP வேணும்னா இனி எதுவும் கேக்காதெ. OK!" என கமலி தன் தோழியை எச்சரித்தாள்.

தந்தையின் முகவரி அறியாத குழந்தையை இழிவாக பார்க்கும் உலகத்தில், கமலி தன் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தைக்கு புகழேந்தி என பெயரிட்டாள். பெண்ணோ, ஆணோ எதுவாக இருந்தாலும் பெயரில் மட்டும் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என உறுதியாக இருந்தாள் கமலி. ஓர் எழுத்தாளனின் வாரிசின் பெயரில் இலக்கியம் நயம் வேண்டும் என நினைத்தாள் போலும் கமலி...ஐய்யோ உண்மையை உளறி விட்டேனோ???

வேறு வழியில்லை. கமலியின் மீது நீங்கள் தவறான கருத்தைக் கொண்டிராமல் இருக்க உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும் போலிருக்கு!! தெருவில் பொறுக்கித்தனமாக சுற்றுபவனிடம் கமலி காதல் வயப்படவில்லை. புத்தகத்தோடு காதல் கொண்டவனையே அவள் நேசித்தாள். மன்னிக்கவும்! இன்னமும் நேசிக்கின்றாள்; உயிருள்ள வரையும் நேசிப்பாள். இதில் என்ன ஒர் உண்மை என்றால், அவன் காதலுக்கு ஏற்கெனவே ஒரு காதலி இருக்கின்றாள். இந்த உண்மை சத்தியமாக கமலிக்கு முதலில் தெரியாது. உண்மை அறிந்திருந்தால், இன்னொருத்திக்கு சொந்தமானவனை எப்படி காதலித்திருப்பாள் கமலி?? ஆனால், முழுதாய் விழுந்து விட்டாளே...எப்படி அதிலிருந்து மீண்டும் எழுவாள்?? எழ வழியில்லாமல் இல்லை; எழ விரும்பாமல், விழுந்தவாறே..இல்லை இல்லை..அவனுள் ஐக்கிமாகியே விட்டாள்.

அதெல்லாம் சரி..கமலியின் காதலனுக்குத்தான் காதலி இருக்கிறாளே??? அப்போ கமலியின் மடியில் ஏது கனம் என்று யோசிப்பீர்களே?? நீங்கள் கேட்பது வாஸ்த்தவம் தான்!!!! அவனுக்கும் கமலி மீது காதல் வந்ததுதான் கமலியின் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய திருப்புமுனையே. கமலிக்கே அது மாயையாகத்தான் இருந்தது. காலத்தின் கட்டாயம்; கமலியின் உண்மை காதலில் மாயம்...அந்த எழுத்தாளனையும் தன் காதலால் ஆளப் பிறந்தவள்தான் கமலியோ!! ம்ம்ம்ம், காதலனின் காதலிக்கு துரோகம் செய்தவள்தான் கமலி. இதில் இல்லை என்று மறுப்பதிற்கில்லைதான். ஏனெனில், அந்தப் பெண்ணுடைய காதலுக்கு கமலி எதிரியே கிடையாது. தன் காதலன் அவனது காதலியோடு வாழ்நாள் முழுவதும் கவிதையாக வாழ ஆசைப்படுபவளும் கமலியே.. "இந்தக் கமலிக்கு மண்ட ஓடிப் போச்சானு" எல்லோரும் நினைப்பார்கள். அவள் அப்படித்தான்.. என்ன செய்வது!!

ரகசியமாகத் துளிர்விட்ட காதல்தான் என்றாலும், கமலிக்குள் துளிர்விட்ட உயிர் அதை அம்பலப்படுத்த முயன்றது. அம்பலமானால், காதலனின் எழுத்துப் பணிக்கு கலங்கம் ஏற்படுமோ என்று அஞ்சிய கமலி,எழுத்தாளன் தந்தையாகப் போகிறான் என்ற உண்மையை அவனிடமிருந்தே மறைத்து, அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றாள். எங்கோ சென்ற இடத்தில் தன் தோழியின் வீட்டில் தஞ்சமானாள். தாய்மைக்கு புதியவளான கமலி, தோற்றத்தில் மட்டுமின்றி அனைத்து கோணங்களிலும் புதிதாகப் பிறந்தவளாய் ஆனாள்.

காதலனின் நினைவுகள், அவனது படைப்புகள், இவைதான் கமலியின் உற்றத் துணை. இந்தத் துணைக்கும் துணைச் சேர்க்க காதலனை உறித்து வைத்தாற்போலவே குழந்தை கமலியின் கர்ப்பத்திலிருந்து இவ்வுலகிற்கு களம் இறங்கினான். "நீ உருவத்தில் மட்டும் உன் அப்பாவ போல இருக்கக் கூடாது. அவரப் போல நீயும் ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும், புகழ்" என்றாள் கமலி புகழேந்தியைப் பார்த்து. தன் தாயானவள் சொன்னதைப் புரிந்து கொண்டது போல தன் சின்னக் கண்களை உருட்டி, பிஞ்சு கைகளை ஆட்டி கமலியை ஆக்கிரமித்தான் புகழேந்தி!!!! கமலியை மட்டும் தானா....????? இல்லை.. இல்லை... இந்த உலகையே தன் எழுத்தால் ஆக்கிரமிக்கப் போகிறான் கமலியின் முதல்வன்..!! அவன் தான் புகழேந்தி...!

Monday, May 24, 2010

முன் ஜென்மத்து பந்தமோ?????


"வணக்கங்க....இப்போகூட நானே தான் பேசுறேன். நீங்க பேச மாட்டுறிங்களே...????" என்றான் அவன் அவளைப் பார்த்து. புன்னகையையே பதிலாகத் தந்தாள் அவள்.

ஒரே துறையில், ஒரே நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். அவன் பணி ஒலியில்; அவள் பணி ஒளியில். என்ன புரியவில்லையா??? ரகசியமாகவே இருக்கட்டுமே.

இதுவரை அவர்கள் இருவரும் நேரில் பேசிக்கொண்டதில்லை. FACEBOOK-க்கில் அறிமுகமாகி பல மாதங்கள் ஆகிய பிறகே நேரில் அன்று சந்தித்தார்கள். அதுவும் தற்செயலாக. தற்செயலாக இருந்தாலும், அவள் வாழ்க்கையில் அது ஒரு நற்செயலாகவே விளங்கியதாக அவளுக்கு இன்னமும் ஓர் எண்ணம். அவனைப் பார்த்த அந்த நிமிடத்தில் அவன் இரு விழிகளில் தன் முன் ஜென்மத்தைப் பார்த்தது அவளது கயல்விழிகள்.

ஏற்கெனவே அவனைப் பார்த்ததில்லை; பேசியதும் இல்லை; அட, சொந்தமும் இல்லை. ஆனால், கால காலமாக அவனிடம் வாழ்ந்ததுபோல அவளுக்கு நெஞ்சுக்குளியில் எதோ ஊற்றெடுத்தது. அவனுக்கு எப்படியோ, அது அவளுக்கு தெரியாது.

முன்பு, FACEBOOK-கில் அவனது படைப்புகளை ரசித்தவள், முதன் முறையாக அன்று அவனையும், அவனது பேச்சையும் ரசிக்க ஆரம்பித்தாள். பூச்செடிக்கு முன்னால் நின்றிருந்தவளைப் பார்த்து அந்தப் பூச்செடியில் இருந்த பூக்களுக்கு நிகராக அவளை வர்ணித்து பேசியதை இன்னமும் அவள் மறக்கவில்லை. "உண்மையாத்தான் வர்ணிக்கிறானா?????" என அவள் மனம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டது அன்று.

பத்து நிமிடங்கள் படபடவென அவன் பேசிய வேளையில், அவள் பதிலுக்கு பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணலாம். அய்யோ வாயாடியம்மா அவள் என அவளைப் புகழ்ந்து தள்ளியவர்கள், அன்று அவன் முன் அவள் ஊமையாகி நின்றதைப் பார்த்திருந்தால், இது கனவா, நனவா என தங்களைக் கிள்ளியே பார்த்திருப்பார்கள்.

"இன்று நின்று பேசுகிறோம்.வரும் காலத்தில் நம் சந்திப்பு நிர்ணயிக்கப்படுமானால், அன்று உட்கார்ந்து தேனிர் அருந்திக்கொண்டே பேசலாம்" என்றான் அவன் விடைப்பெறுமுன்.

விடைப்பெற மனம் இல்லை என்றாலும் அவனது உடலுக்கு விடைக்கொடுத்தவள், அவனது இதயத்திற்கு விடைக்கொடுக்க விரும்பாமல், அதைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டாள்.

"ஹேய், காதலா??" என்றது அவளது மனசாட்சி. "சேச்சே...இல்ல.. அப்படிலாம் ஒன்னும் இல்ல...அவன் யாருனே தெரியாது. நீ வேற" என்றாள் சற்று தயங்கியவளாக அவள். "அப்போ ஏன் அவன் BYE சொன்னப்போ, உன் மனசு அப்படி தவிச்சது டீ?" என்று மேலும் வினவியது மனசாட்சி. "நீ ரொம்ப கேள்வி கேக்குற? பேசாம உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போறீயா..." என மிரட்டினாள் அவள். "PLEASE,,PLEASE சொல்லுடா மா..." என மனசாட்சி கெஞ்சியது. மனசாட்சி மேல் பரிதாபப்பட்டவளாய் அவளும், " என்னமோ தெரியல.. அவனைப் பார்த்ததும் என்னமோ தோணுது.. நீ தப்பா நெனைக்காதே.. இது வயது கோளாறு இல்ல.. SOMETHING MIRACLE.. யாருனே தெரியாது.. ஆனா, அவன் மேல பாசம் எப்படி வந்துச்சு...? அதுவும் பார்த்ததுமே? ஒருவேள முன் ஜென்மத்துல அவன் என் புருஷனோ????????" என்றாள்.