Monday, February 13, 2012


"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க"

"நட்பு" திரைப்படத்திற்காக யேசுதாஸ்-சும், ஜானகியும் பாடிய எண்பதாம் ஆண்டுப் பாடல்தான் இது.
எண்பதாம் ஆண்டுக் காலகட்டத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படப் பாடல்களில் என் மனதைக் கவர்ந்த பாடல்கள் எண்ணிலும் அடங்காது; ஏடுங் கொள்ளாது. இசை ஞானி இளையராஜவின் இசையுடன்கூடிய பாடல்வரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. அந்த வகையில், நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்கள் ஏராளம்...

இருந்தும், மூன்று நாட்களுக்கு முன் ஒரு எண்பதாம் ஆண்டுப் பாடல் திடீரென என்னுள் ரீங்காரமிட்டது. திடீரென்று சொன்னேன்.. எங்கே.. எப்போதென உங்களுக்குத் தெரியாதே...!! ம்ம்ம்ம், நள்ளிரவு மணி 12 இருக்கும். நான் குளியறையில் இருந்தேன். அந்நேரத்தில்தான், எனக்குள் அந்தப் பாடல் ஒலித்தது. அது எந்தப் பாடல்??

"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது............!!!!!!!" -இந்தப் பாடல்தான்...!!!

அப்போது ஒலிக்கத் துவங்கிய பாடல்...இந்த நொடி வரையில் என்னுள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. எங்கே போனாலும், இந்தப் பாடலை முனுமுனுத்தவாறேதான் இருக்கிறேன். என்ன மாயமோ, மர்மமோ தெரியவில்லை. இந்தப் பாடல் என்னை ஏதோ செய்துவிட்டது என்றால் அது மிகையில்லை. நான் காதலிப்பது அதன் வரிகளையா? இசையா? சத்தியமாக தெரியவில்லை. ஆனால், இப்பாடலை அதிகம் காதலிக்கிறேன்.

"காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது
ஒரு தத்தை கடிதத்தைத் தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க"

"ஒரு தத்தை கடிதத்தை" - என்னமா வரி இது?? வர்ணிக்க வார்த்தைகள் இல்லை போங்க!!!

"உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே" - ம்ம்ம்ம், செத்து போகலாம் இந்த வரிகளுக்கு... என்னங்க இது..? பார்க்காவிட்டாலும் தூக்கம் தொல்லையாக இருக்கிறதாம். பார்த்தாலும் தூக்கம் இல்லையாம். காதலர்களின் ஏக்கங்களைப் படம் பிடித்து காண்பிக்கும் நிஜ வார்த்தைகள் இவைத்தாம்.

"இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது"

கோதை...பேதை...பாதை...!!! இந்தச் சந்தங்கள் சிந்தும் சாரல்கள் எனை முழுதும் நனைக்கின்றன. பெண்ணின் பாதை அவளது கணவனின் பாதையை நோக்கியே செல்கிறதாம். மனதில் நினைத்த காதலனை மணமுடிக்காமல் உறங்காதாம் உண்மை காதலியின் மனது. எண்ணம் நிறைவேறினால் அதற்கு ஈடான சொர்கம் இல்லையாம்.. இப்படி எல்லாம் என்னவரைப் பார்த்து பாட ஆசைத்தான். அதைக் கேட்க அவர் வரணுமே..!!

இதில் என்ன வேடிக்கை தெரியுமா? சில நேரங்களில்..இல்லை இல்லை பல நேரங்களில் என்னை அறியாமலே இந்தப் பாடலைப் பொதுவில் உரக்கப் பாடி விடுகிறேன். "உங்களுக்கு என்ன ஆச்சு" என பிறர் எனைக் கேலி செய்யும் அளவிற்கு இப்பாடல் எனைக் கொண்டு வந்துவிட்டது. பாவம், இன்னும் யார் யாரிடமெல்லாம் இந்தப் பாடலைப் பாடித் தொல்லை செய்யப் போகிறேன் என தெரியவில்லை.

"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது" --- " நீங்க வரிங்களா? என் நெஞ்சில் நின்ற ராகத்தைக் கேட்டு ரசிக்க...? என்னோடு சேர்ந்து பாடினாலும் சரிதான்...!!! :)

-கயல்விழி மணியன்

No comments:

Post a Comment